Tamil Thoughts Published a poem about the Nostalgic feel of the Evening time (மாலை வேளை) - Written by Krishna Priya, MD, KAP System Pvt LTD. மாலை வேளை! | Evening Time சாயங்காலம் – மாலை வேளை! நித்தமும் வந்து சென்ற வசந்த காலம்! பள்ளி நாட்களில் பாய்ந்தோடி வீடு சென்ற வேளை ஒவ்வொரு மாலையும் குதூகலமாய்! வெறிச்சோடி கிடந்த வீதி – பிள்ளைகளின் கரவொலியில் கலகலப்பாய்! அன்றைய தின உழைப்புக்கு நன்றி சொல்லிடும் மாலை வேளை உணர்த்திடும் சுதந்திரம்! முதியவரின் முகத்தில் களிப்பு – கண்கள் வாசலை நோக்கி வரவேற்போடு ! தட்டில் முறுக்கும் பலகாரமுமாய் குடும்பத்தோடு தேநீர் களித்த வேளை! பண்பலையில் பவனிவரும் வானொலி இதமான ராகங்களோடு! தெருமுக்கு கடையில் – சலசலப்பு சூடான போண்டா வடைக்கு! மரங்களுக்குள் காதல் பரிணாமம் ஒவ்வொன்றும் வெட்கத்தில் தலை அசைக்க தொட்டும் தொடாமலும் நம்மை வருடிச் செல்லும் இதமான இளங்காற்று! மெல்ல மலர்ந்த முற்றத்து முள்ளை! அழகாய் கோர்க்கப்படும் வேளை! நண்பர்களுடன் வீதி உலா – இளைஞர்கள் தோள் சேர்த்து கரகோஷமாய்! அதைக் கண்டும் காணாமலும் குமரிக்கூட்டம் – ஜன்னல் ஓரமாய்! கம்பீரமும் – காதலும் கலந்த வேளை அது! முற்றத்தில் கோலம் இடல் – மங்கையருக்கு ஆர்வமூட்டும் சாயங்கால சம்பிரதாயம்! நிலவுடன் போட்டியோ – பெண்கள் அலங்காரத்தோடு அம்சமாய்! பறவைகள் அமர்க்களம் – இசையேற்றி இனத்தோடு இணைகின்ற அந்திவேளை! வீடுதிரும்பும் தாய்ப்பசு – துள்ளிக்கொண்டு கன்றுக்குட்டி அன்பைப் பரிமாறிக்கொள்ளும் அந்திவேளை! சுடர்விட்டு எறியும் தீபம் – ஆலய தரிசனம் சாம்பிராணி, வாசனைப் பத்திகள் மனம் வீசிட! மேகங்கள் மௌனமாய் அணிவகுக்க சூரிய அஸ்தமனம் அரங்கேறும் வேளை! ஒவ்வொன்றாய் ஏற்றப்படும் தெரு விளக்கு! சிறுவன் குறும்பாய் அசைத்திடுவான் கண்ணை – ஆம் அவன் கட்டளைக்கு கட்டுப்பட்டது கம்பம் என்று! மெதுவாக நிலவும் வந்துசேரும் நிலாசோறுக்கு அவ்வந்திப்பொழுதினை அழகு சேர்த்து! ஒவ்வொரு நிகழ்வும் இன்றும் இனிமையாய் இம்மாலை வேளைதனை மெருகேற்றுகின்றது! காலச்சுழற்சி நம்மை இடப்பெயர்ச்சி செய்தபோதும் இவ் அழகான மாலைப் பொழுதின் நினைவுகள் தனிமையைக்கூடத் தோற்கடிக்கிறது! கரங்களில் தேநீருடன் நினைவலையில் இதமாயிருக்கிறது சாயங்காலம் – மாலை வேளை! - Krishna Priya Refrence: மாலை வேளை! | Evening Time









