மாணவர்கள் காந்தி-பெரியார் பாதையில் செல்ல வேண்டும் – ஸ்டாலின் உறுதி
“கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து; அதனால்தான் அதை வழங்கவும், அதன் திறனை வளர்க்கவும் திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியின் 75-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். அதே சமயம் மாணவர்களிடம் உரையாற்றிய அவர், “நான் அரசியல் பேச இங்கு வரவில்லை, ஆனாலும் மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம்” என்று சொன்னார்.
மாணவர்கள் காந்தி, அம்பேத்கர், பெரியார் போன்று சமூக மாற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றும், கோட்சே போன்ற வன்முறையைத் தூண்டும் பாதையை ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அவரது உரையில் கல்வியின் முக்கியத்துவத்துடன் கல்வி மட்டுமே மாறாத சொத்து என்றும், அது சாதி மத பேதங்களைக் கடந்துவிட வேண்டுமென்றும் கூறினார். “ஒரே மனப்பாங்கில் நிற்கும் தமிழகத்தை யாரும் வீழ்த்த முடியாது” என்ற அவர், மாணவர் நட்பு என்றும் நீடிக்க வேண்டும் என்றும் ஆசீர்வதித்தார்.
அதேவேளை இந்தக் கல்லூரியில் இருந்து திராவிட அரசியலில் உயர்ந்துள்ள அமைச்சர்களையும் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் இன்றைய மாணவர்களும் அதே இடத்துக்கு வரக்கூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.














