காட்சி - 1 :
மதியம் இரண்டரை மணி, “அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி திருக்கோயிலின் சார்பாக தீர்த்தகுடம் எடுக்க, சரியாக மூன்று மணியளவில் புறப்படவிருப்பதால் பக்தர்கள் அனைவரும் கோயிலின் முன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது”. “ஆமாம்ப்பா வண்டி தயாரா இருக்கு எல்லாரும் குடத்த எடுத்துட்டு வந்து சேருங்க, இந்தாப்பா மைக்கப் புடி”, என்று செருமியபடி நாட்டாமை ராஜு துண்டை உதறிக்கொண்டு அடுத்த வேலையை கவனிக்க கோயில் முற்றத்துக்கு விரைந்தார்.
“மூணு மணிக்கு வண்டி கிளம்புதுனு இப்ப சொன்னா எப்புடி கிளம்புறது, ஏய் கீர்த்தனா வெளக்குன செம்புக் குடத்த எடுத்துக்க. டேய் முரளி ஜெயந்தி அத்த ரெடியாகிட்டாங்கலானு கேட்டுட்டு வா" , வேணி அக்கா சொல்லிக்கொண்டே குடத்த கையில வாங்கிக்கொண்டு வீட்டு வாசலை கடந்தார்.
“அம்மா அத்த ரெடியாகிட்டு இருக்காங்க, நா பிரபு, ஹரியோட கோயிலுக்கு போறேன்”, முரளி நண்பர்களுடன் கோயிலுக்கு ஓடினான்.
வேணி அக்கா, “என்ன ஜெயந்தி இவ்வளவு நேரம், வாங்க… நாட்டம கத்தப் போறாரு” முற்றத்தில் இருந்து எட்டிப்பார்த்து கேட்டார். “இதோ வந்துட்டேன்கா, இந்த பிரபுவ குடத்த எடுத்துதானு சொன்னா கோயிலுக்கு போறேன்னு ஓடிட்டான்”, ஜெயந்தி அத்த பேசிக்கொண்டே வீடு தாள் போட்டு வெளியே வந்தார்.
“கீர்த்தனா! அம்சா அத்தைய கூப்புடு, விஜயா வந்துட்டியா.. போலாமா !!! ”, வேணி அக்கா கேட்டதற்கு, விஜயா அக்கா “போலாம்… அம்சா வரலைன்னு சொன்னா, அவ புருசங்காரே இன்னும் சாப்ட வரலையாம்” பேசிக்கொண்டே நான்கு வீடு தாண்டியபின் கீர்த்தனாவும் அம்சா அத்த வரவில்லை என்கிற தகவலோடு, அவர்களுடன் சேர்ந்து நடக்க தொடங்கினாள். இன்னும் சிலர் போகும் வழியில் சேர்ந்து, அணிவகுத்து பதினைந்து வீடு கடந்து கோயில் வந்து சேர்ந்தனர், மணி மூணு பதினைஞ்சு.
நாட்டாமை துண்ட வீசி, அங்கு விளையாடி திரிந்த சிறுவர்களை வைத்து பூஜை சாமான்களை வண்டிக்கு ஏற்றி விட்டு, மைக்கில் ஒருமுறை “வண்டி கிளம்பப் போகுது, ஏய் மனோகரா எங்கப்பா இருக்க வந்து சேரு வண்டிய எடுக்கணும்ல” கூவினார். “ஏம்மா பொம்பளைங்க எல்லா இப்பதான் நேரங்கடந்து வர்றதா, ஏறுங்க வண்டில”, வேணி அக்காவ பாத்து சொன்னார். மணி அண்ணன், வயசுப் பசங்கள பார்த்து சொல்ல, சுரேஷ் அண்ணனும் மன்னாரும் ஸ்டூல் எடுத்து போட்டு வண்டில பெண்கள் சிறுவர்கள் ஏற உதவினார்கள்.
மணி நான்கு என்கிற போது நாயனக்காரர்கள் மேளம் வாசிக்க, தேங்காயை உடைத்து, கற்பூரம் காட்டி, எலுமிச்சைப் பழத்தக் கீறி குங்குமத்த வச்சு நாலாபுறமும் பிச்சுபோட்ட, பூசாரி முருகனுக்கு அருள் வந்து வண்டி எடுக்க அனுமதி கொடுத்தபிறகு, “ஓம் சக்தி !!! பராசக்தி !!!" என்ற கோஷங்களுடன் வண்டி புறப்பட்டது.
வண்டி கதவில் வயசுப் பசங்க உட்கார்ந்து கொள்ள, முரளி, பிரபு, ஹரி, கீர்த்தனா மற்ற சிறுவர்கள் பக்கத் தடுப்புகளில் நின்று எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தனர். ஜெயந்தி அத்த, வேணி அக்கா, விஜயா அக்கா மற்ற பெண்களுடன் அமர்ந்துக் கேலிப் பேசிக் கொண்டு வந்தார்கள். மனோகர் அண்ணன் வண்டி ஓட்ட … நாட்டாம, பூசாரி கிளீனர் சீட்டில் அமர்ந்து கொண்டனர்.
காட்சி - 2 :
மாலை நான்கரை மணி, சண்முகநதி வந்ததும் முதல் ஆளாக நாட்டமை இறங்கி “ஏப்பா கொட்டுகாரவுகள முதல்ல இறங்க விடுங்க, ஏய் மன்னாரு கதவ திறந்து ஸ்டூல போடுங்கப்பா…”, சொல்லிவிட்டு நகர்ந்துவிட நாயனக்காரர்கள் முதலில் இறங்கி மேளம், நாதஸ்வரம் வாசிக்க மற்ற அனைவரும் குடத்துடன் இறங்கினார்கள்.
நாட்டமையும், பூசாரியும் முன்னாடி சென்றார்கள். மனோகரு அண்ணன், “டேய் ஜலக்கு… வண்டிய கொண்டுபோய் லைன்ல விட்ரு”, மணி அண்ணனிடம் பணம் வாங்கி கொடுத்து, “இத டீ குடிக்க வச்சுக்கோ…”, கிளீனரை வண்டிய எடுத்துப் போக சொல்லிவிட்டு பின்னே தொடர எல்லோரும் ஆற்றை நோக்கி நடந்து போனார்கள்.
ஆற்றை அடைந்ததும் நாயனக்காரர்கள் அமைதியானார்கள். பெண்கள் கரையில் வரிசையாக குடங்களை அடுக்கி வைத்துவிட்டு ஆற்றில் இறங்குவதற்கு முன்பே சிறுவர்களும் வாலிபர்களும் அவரவர்க்கேற்ற ஆழத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்துவிட்டனர்.
நாட்டமை குடங்களையும், பூஜை பொருட்களையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க பூசாரியும் தண்ணீரில் நனைந்து வரப் போய்விட்டார். நாட்டமை, “டேய் சுரேஷு, மன்னாரு போய்த் தழை உடச்சிட்டு வாங்க” என்று சில நிமிடங்களில் அதட்டினார்.
சிறுவர்களும் வாலிபர்களும் சிறு கூட்டமாக வண்டி மணல் அள்ளாத பாதையில் அக்கரைக்கு சென்றனர். வாலிபர்கள் மரத்தில் ஏறி மாந்தழையும் வேப்பந்தழையும் ஒடித்துப்போட சிறுவர்கள் அதை சேகரித்துக் கொண்டனர். மன்னாரு நவாப்பழ மரத்தில் ஏறி உலுக்க அதையும் எடுத்து கொண்டனர். அதற்குள் மணி அண்ணன் வந்து மிரட்ட வேப்பந்தழை, மாந்தழை, புளியம்பழம், மாங்காய், நவாப்பழம் சகிதமாக இக்கரைக்கு வந்து சேர்ந்தனர். அம்மாக்களிடமும், தன் வயதொத்த பெண்களிடமும் கொடுப்பதற்கு சிறுவர்கள் கையில் பழங்களை கொடுத்து அனுப்பினர் வாலிபர்கள்.
மீண்டும் ஆற்றில் இறங்கி விளையாட ஆரம்பிக்க, குளிச்சு முடிச்சு மேல வந்த பூசாரி ஈரத் துணியால வாயை கட்டிக்கொண்டார். சந்தனத்துல பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டு கோயில் கலசத்துல(ஒன்னரையடி உயரமுள்ள செம்பு குடம்) சுற்றியும் வரி வரியா நூல் சுத்தி ஆற்றுத்தண்ணீர் நிரப்பினார். மஞ்சள் கலந்து வைத்துவிட்டு கொண்டு வந்த தப்பக்குச்சிகள்ல குடத்து நடுவுல செங்குத்தா ஒன்னும் கிடைமட்டமா இரண்டும் வைத்து விழாமல் இருக்க வேப்பந்தழையை ஒரு முழ அளவுக்கு உடைத்து செருகினார். பத்து முழம் மல்லிகை, இருபது முழம் கதம்பம் சரத்தை சுற்றி வேப்பந்தழை தெரியாத அளவுக்கு ஒன்னரையடி உயரத்துக்கு முழு பின்பட்டம் தயார் செய்து விட்டார். சந்தனத்த கையளவு எடுத்து அம்மன் முகமா மாத்தி அந்தப் பட்டத்துல ஒட்டி, கொண்டு வந்திருந்த அம்மன் முக உருவத்த அதுல பதிச்சு, இறுக்கிக்கட்டி, குங்குமம் சந்தனம் இட்டு அம்பாளை படைத்து விட்டார்.
இந்த நேரத்துல மற்ற பெண்களும் குடத்தில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் கலந்து, கதம்பம் சுற்றி, மாந்தழை வேப்பந்தழை வைத்து வரிசையாக அடுக்கி வைத்தனர். இளம்பெண்கள் கொண்டு வந்திருந்த முளைப்பாரியும் பின் வரிசையில் வைத்திருந்தனர்.
நாட்டாம தண்ணீரில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்களை விரட்டி கரைக்கு ஏற்றிவிட்டு, அவரும் தண்ணீரில் நனைந்து வந்து சேர்ந்திருந்தார். நாயனக்காரர்கள் வெத்தலை சாப்பிட்டு முடித்த திருப்தியுடன் வாசிக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
பூசாரி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி ஆராத்திக் காட்டும்போதே பெண்கள் குலவை போடத் தொடங்கினர். பூசாரி தட்டை கீழே வைத்த உடனே அருள்வந்து வாயில் கட்டிய துண்டை எடுத்து விட்டு, கையை முறுக்கிக் கொண்டே நெட்டித் தாண்ட முயன்றவரை மணி அண்ணனும், மனோகர் அண்ணனும் பிடித்துக்கொள்ள பெண்கள் பயபக்தியில் அழுது நிற்க, சிறுவர்கள் ஒளிந்துகொண்டு பயந்து பார்க்க, நாட்டாம ராஜு மட்டும் துணிந்து முன்னால் வந்து, “ஆத்தா எதுக்கு வந்துருக்ற… உனக்குக் கொற எதுவும் வச்ருக்கோமா !!!” எனக் கேட்டார். ஆத்தவாகியிருந்த பூசாரி, நாட்டாமைட்ட விபூதி தட்டைக் காட்ட, அவர் எடுத்து நீட்டும்போது கொத்தா அள்ளி நாட்டாம தலையில போட்டு நெற்றியில பூசி விட்டார். கண்ண உருட்டி “போகாலாம்…” என்பது போல் விகாராமாய் சிரித்து சாந்தமானார்.
வரிசையாக எல்லாரும் சாமிக் கும்பிட்டு முடிந்தவுடன், பூசாரி “ஆத்தா, உம்புள்ளைக்கு சத்தியக்குடு…”, என வேண்டிக்கொண்டு சாமிக் கலசத்த மாலை கழுத்தோடு நின்ற மணி அண்ணன் தலையில் ஏற்றி வைத்தார். முன்னே மேளம் வாசிக்க மற்றவர்கள் அவரவர் கலசத்தை எடுத்துக்கொள்ள ஆற்றில் இருந்து மணி ஆறரை என்கிற போது நடக்க ஆரம்பித்தனர்.
காட்சி - 3 :
சிறுவர்கள் மேளத்துக்கு ஆடி வர, மணி அண்ணன மனோகர் தாங்கியபடி அம்மன் கலசம் முன்னே வர, பெண்கள் மூனுபேர் வரிசையாக நடந்து வர, நாட்டாம முன்னும் பின்னும் அதட்டிக்கொண்டே மிதந்து வர, சுரேஷு, மன்னாரு மற்ற வாலிபர்கள் வேலிபோல் கைகோர்த்து சாலையின் பாதியில் பெண்களுக்கு பக்கவாட்டில் வர தீர்த்தகுட பவனி ஊர்க்கோயில் நோக்கிப் போனது.
ஆற்றில் இருந்து அரை மணி நேரம் நடந்த பிறகு நாயனக்காரர்கள் அமைதியாகி விட, முரளி, “ஓம் ஓம் சக்தியே !!!” உரத்துச் சொல்ல மற்ற சிறுவர்கள் “ஆதி பராசக்தியே!!!” என்று கோஷமிட்டுக் கொண்டே வந்தனர். வேணி அக்கா, “ஓம் சக்தி !!!” கூற, விஜயா அக்கா மற்ற பெண்கள் முன் வரிசையில் “பராசக்தி !!!” சொல்லிக் கொண்டு வந்தனர். பின் வரிசையில் முளைப்பாரி எடுத்து வரும் பெண்களும் வாலிபர்களுமாக சின்ன முணு முணுப்புகளுடன் பேசிக்கொண்டு வந்தனர்.
சரியாக மூன்று கிலோமீட்டர் தாண்டி அனைவரும் அமைதியாக நடந்து வரும்போது, பூசாரி எல்லாரையும் நிறுத்தி எலுமிச்சைப் பழத்தக் கீறி குங்குமம் வைத்து நாலாப்புறமும் வீசி மேளம் அடிக்க வைத்தார். இந்த நேரத்தில விஜயா அக்காவுக்கு ஆத்தா வந்திருச்சு, கலசத்த அவங்கப் பொண்ணு வாங்கி கொண்டாள். அவங்க நாயனக்காரர்களிடம் வந்து சில மாதிரி அடிக்கக் கேட்டு ஆடிக்கொண்டே இருக்கும் போது, நாட்டாம முன்ன வந்து “ஆத்தா அப்டியே நின்னா எப்புடி, முன்ன நடந்தாதான நல்லா இருக்கும் !!!" உரிமையோடு கேட்க ஆத்தாவும் நடக்க ஆரம்பிச்சது. நாட்டாம விஜயா அக்கா சாலைக்கு வராம பார்த்து கொண்டார்.
மணி எட்டு எனும் போது மலையப்பசுவாமி வைத்தியசாலை வந்து அனைவரும் அமர்ந்து அங்கு தந்த டீ மற்றும் வடைகளுடன் இளைப்பாறி கொண்டனர். சிறுவர்கள் தனியாக விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நாட்டாம ராஜு வைத்தியசாலை மானேஜரிடம் பேசி நன்றி சொல்லி வந்த பிறகு மேளம் அடிக்க ஊர்வலம் புறப்பாடு துவங்கியது.
மணி ஒன்பதரை, தெரு வடக்கு வாசல்ல இருக்கற கருப்பன சுவாமிகிட்ட நின்னு பூசாரி தேங்காய் உடைத்து ஆராத்தி காட்டும் போதே ‘கருப்பன சாமி கொண்டாடி’ மணி அண்ணன் அவருக்கு கருப்பன் வந்துட்டான். மூன்றரையடி கலசத்தோட ஒரு சிலுப்பு சிலுப்ப மனோகரும் நாட்டமையுமா தாங்கி பிடித்து கொண்டனர். நாட்டாமை தொடர்ந்து “என்ன கருப்பா என்னாச்சு” கேள்வி கேட்க. “எனக்கானத செய்யாம…” மணி அண்ணன் அடிமட்ட குரலில் இருந்து நரம்பு புடைக்க, கண்ணு தெறிக்க “என்னடா…” னு குரல உயர்த்தும் போது மனோகர் மிரண்டு போனார். நாட்டாம ராஜு, “எங்களால முடிஞ்சத செஞ்சுருக்கோம், அடுத்தமுறை உனக்கும் சேர்த்து சிறப்பா செஞ்சிடறோம்” என்று கெஞ்சியதும், “ம்ம்ம்ம்….” என கண்கள் உருட்டி கருப்பன் விடை பெற்று கொண்டார்.
இந்த சமயத்தில், மன்னாரு கோயிலுக்கு சென்று மைக் செட்டுக்காரர்களிடம் தகவல் சொல்ல, “இன்னும் சில நிமிடங்களில், தீர்த்தகுட ஊர்வலம் வீதியில் வர இருப்பதால் பக்த கொடிகள் அருள் பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்… உங்கள்… இல்ல விழாக்களுக்கான ஒலி ஒளி அமைப்புகளை சிறப்பாக செய்து தர அடிவாரம், தெற்கு ரத வீதி, சங்கீதா சௌண்டு சர்வீஸ்ஸ்ஸ்…
விஜயா அக்கா வாயில எழுமிச்சையோட ஊருக்குள்ள வந்ததும் திருநீறு வாங்கி எல்லாருக்கும் கொடுத்துக்கொண்டே வீதியில் நடந்து வர, எல்லாரும் வாசல்ல நின்னு குடத்துல தண்ணீ கொண்டு வந்து மணி அண்ணா கால்லயும் மேலயும் ஊற்றிவிட்டு விழுந்து கும்பிட்டு சென்றனர்.
அம்சா அத்தை கொண்டு வந்த குடத்தில பாதி தண்ணிய விஜயா அக்கா மேலயும், மீதி மணி அண்ணா கால்லயும் ஊத்திட்டு விழுந்து வணங்கும்போது விஜயா அக்கா பூசிவிட்ட விபூதியோடயும், கண்ணுல (பக்தி !?!?) கண்ணீரோடயும் வீட்டுக்குள் சென்று மறைந்தார்.
ஊர்வலம் கோயில் வந்ததும், கோயில் கலசத்த கர்ப்பக் கிரகத்துல வச்சுட்டு மற்ற தீர்த்தகுடம் முளைப்பாரிகளை சன்னதில வச்சுட்டு, தேங்காய் உடைத்து ஆராத்தி எடுத்து எல்லோர்க்கும் விபூதி குடுத்தார் பூசாரி. ஆத்தா போயி அமைதியா இருந்த விஜயா அக்காவ ஜெயந்தி அத்தையும் வேணி அக்காவும் தாங்கி பிடித்திருந்தார்கள்.
சுரேசும், மன்னாரும் அவரவர்க்கான 'முளைப்பாரி'யையும் தீர்த்தக் குடத்தையும் முதல் வரிசைக்கு நகர்த்தி வைத்தனர். முரளி, பிரபு, ஹரி மற்ற சிறுவர்கள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர்.
நாட்டாம ராஜு “நாளைக்கு ஆத்தாளுக்கு அபிஷேகம் பண்ணிட்டு குடத்த எடுத்துக்கலாம்… எல்லாரும் கிளம்புங்க“னு சொன்னதும் வீட்டுக்கு கிளம்ப தொடங்கினர். மனோகரு மணி அண்ணன வீட்டுக்கு கூட்டி சென்றார். வேணி அக்கா, “கீர்த்தனா… முரளி… வாங்க போலாம்!!!”. “பிரபு… வாடா…”, ஜெயந்தி அத்த கூப்பிட்டு, விஜயா அக்கா சகிதமாக எல்லோரும் சென்று விட, நாட்டாமை கோயில் நடையை சாத்திவிட்டு வீடு கிளம்பினார் இரவு பதினொரு மணிக்கு…
***முற்றும்***