பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளராக செயல்படுகிறது - இந்திய ராணுவம் கடும் கண்டனம்
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு துணைபோகிறது என்று இந்தியா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததை அடுத்து, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு முயற்சி செய்தது. இந்திய ராணுவம் அதை முறியடித்து பதிலடி கொடுத்தது.
இந்த சூழலில் இருநாடுகளும் அமெரிக்காவின் தலையீட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனை தொடர்ந்து இன்று இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன.
இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பாகிஸ்தான் மீது தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாகிஸ்தான் தனது ராணுவத்தையும் பயங்கரவாதத்தையும் ஒன்றாகப் பார்த்து செயல்படுகிறது. இந்தியா சண்டை நிறுத்தம் உடன்படிக்கையை மதிக்கிறது என்றாலும் பாகிஸ்தான் மீறினால் கடும் பதிலடி வழங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் அகில இந்திய ராணுவ, கடற்படை, விமானப்படைகள் ஒருங்கிணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மற்றும் சீன தயாரிப்பு ஆயுதங்களை அழித்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தான் பயன்படுத்திய சீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் மிசைல்கள் ஆகியவை பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடிக்க முக்கிய பங்கு வகித்தன. மேலும் பாகிஸ்தான் புனித இடங்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்த தாக்குதல்கள் நடத்தியதை இந்திய ராணுவம் கண்டித்தது.
இதையொட்டி ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் புகைப்படங்களும் இன்று வெளியிடப்பட்டது.






