இலங்கைத் தமிழர்களுக்கு நீண்டகால விசா மறுப்பு – மத்திய அரசுக்கு அன்புமணி கண்டனம்
இலங்கைத் தமிழ் அகதிகள் நீண்டகால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்த இலங்கைத் தமிழர்கள், 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், ஆனால் நீண்டகால விசா (1 முதல் 5 ஆண்டுகள்) வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்த்துள்ளார்.
"இது ஈழத் தமிழர் நலன்களுக்கு எதிரானது. மற்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு நீண்டகால விசா, குடியுரிமை சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது அநியாயம்," என்று அவர் கூறியுள்ளார்.
1983க்கு பிறகு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக்கூடாது என்ற மத்திய அரசின் பழைய முடிவு இன்றும் தொடருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு குறைகிறது.
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு மிகக் குறைவு. எனவே, அவர்கள் இங்கு கண்ணியமாக வாழ நீண்டகால விசா மற்றும் குடியுரிமை வழங்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.















