இன்னே தேதிக்கு சமூக நீதிய நிலை நாட்ட எட ஒதுக்கீடுல்லாம் தாவல்லப்பா ஆனா இவனுங்க பேக்ல போயி பொருளாதார எட ஒதுக்கீடு வேற இட்டாந்துருக்கானுவ,அதுக்கும் இந்த போராளிப்பயலுங்க விட்றானில்லின்னு சண்ட புடிக்கறானுங்க,பண்ணையாருங்க்வூட்டுக்கு எதுக்குப்பா எட ஒதுக்கீடு?ஒங்க சமூக நீதி, ஷோஷல் ஜஸ்டீஸ்லாம் டுபாக்கூர்பா என்று பற்பல வாதங்கள் வெடித்துப்பரவும் நிலையில் நான் என்ன சொல்ல மிடியின்?
நான் ஒரு ஷர்மா,பிறந்தது என்னவோ கீழ்நடுத்தரக்குடும்பத்தில்.ஆனால் இடவொதுக்கீட்டு வரிசையில் நான் முன்னேறிய சமூகம்.நான் படிக்கும் காலத்தில் என் தந்தையார் நீதித்துறையில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பார்ப்பனர்களில் ஒருவர். நீதித்துறையில் பணியிடமாற்றம்,முன்னேற்றம் போன்றவற்றிக்கு,வெளிப்படையாக அறிவிக்கப்படாத இடவொதுக்கீட்டு முறை நிலவி வந்தது.அதன் பயனாக நியாயமாகக்கிடைக்கவேண்டிய பல முன்னேற றங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம்,அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்தது.
1989இல் விபிசிங் அரசு பதவியேற்ற பின் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது.அப்போதுதான் அது ஏதோ இந்தியாவாம்,அங்கெல்லாம் சமூகநீதி இங்கிருந்தது போலில்லாமல் முதன்முறையாகக்காலெடுத்து வைத்ததற்கு அநியாய ரவுடித்தனம் கலாட்டா செய்தனர் அன்றைய துக்கடே துக்கடே கேங்.அப்போது பல நெருங்கிய உறவினர்கள் குசுகுசுவென விபிசிங் பயலுக்கு சாவுவாராதா என்று முனுமுனுத்தனர்.27%க்கே போராடும் அவர்களெங்கே 50%க்கும் ஆஃப் ஆகி அடங்கியிருக்கும் நாம் எங்கே என்று சில புரட்சிக்கார உறவினர்கள் கல்யாணம் தெவசம் போன்ற நிகழ்வுகளில் மெல்லமாக உறுமினார்கள். பிறகு என் அண்ணன் எஞ்சினீரிங்கில் நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினான்,அவனுக்கு சென்னைக்கருகே ஒரு கல்வித்தந்தையின் கல்லூரியில் அரசு கோட்டா சீட் கிடைத்தது. இட ஒதுக்கீடு அப்படியொன்றும் மோசமில்லை என்று தெரிந்தது.பின்பு எனக்கும் எஞ்சினீரிங் கிடைத்தது..ஆனால் நான் அப்போது மக்குப்பையனாக இருந்ததால் டோட் 3 என்ற அதிக காசு கொடுத்து கிடைக்கும் இடம் சில நாட்கள் தள்ளி கிடைத்தது. அப்போது புரிந்தது .. கிடைக்கும் ..ஆனால் கொஞ்சம் பொறுமை வேண்டுமென்று.
இடையில் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். என் பள்ளி நண்பன் நல்லாப்படிப்பான் எம்பிசி காரன்.அவன் தான் என் குரு. அவன் அப்பா அனிமல் ஹஸ்பண்ட்ரியில் ஒரு கடை நிலைப்பணியாளர். ஒரு அறை வீடு , வில்லிவாக்கத்தில்.அவன் ஒரு வடமாநில தேர்வு ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தான்.அதற்கு கம்யூனிட்டி சர்டிஃபிகேட்டும் கெஜட்டட் ஆஃபிஸர் கையெழுத்தும் வேண்டும்.அப்பா தான் போட்டார். அந்த வடமாநில தேர்வுக்கு அவன் விண்ணப்பித்தான் அவன் மதிப்பெண்ணுக்குப்பின்னாளில் அந்த சர்டிபிகேட்டே தேவையில்லை.. ஆனாலும் மண்டல் கமிஷன் ஒரு அடிப்படை உறுதியைத்தந்தது.. அப்போது நான் அப்பாவிடம் சொன்னேன் பரவால்ல விபிசிங் செஞ்சது அப்டியொண்ணும் மோசமில்ல தானே என்று.
பின்னாளில் தனியார் கம்பெனியில் வேலை செய்தேன். அதுநாள் அவரை அப்பா என்னை சென்னை தாண்டி தமிழ்நாட்டுக்கு வெளியே அழைத்துச்சென்றது திருப்பதி(அட அது தமிழ்நாடு தான்யா) குருவாயூர்,பெங்களூர். அவ்வளவு தான். வேலைக்காக நான் கர்னாடகா,கடற்கரையோர ஆந்திரா,மகராஷ்ட்ரா, பஞ்சாப், தில்லி என்று சுற்றினேன். அப்போது தான் ஒரு ஷர்மா,பரத்வாஜ கோத்திரம் என்ற சமாச்சாரங்கள் ஒரு கண்ணுக்குத்தெரியாத பாஸ்போர்ட்/க்ரீன்கார்ட் என்பதை உணர்ந்தேன். ஆசான் சொல்வது போல் இந்தியா முழுக்க ஒரு இழை உள்ளது. அது தான் ப்ராமின் ரெஸ்பெக்ட் என்பது.பிராமணர்களுக்கு மரியாதை! வெறும் கோவில்களில் தனி பிரசாதம் என்பதோடு மட்டுமில்லை, பிராமணன் பசியோடு படுக்கக்கூடாது என்பதும் தான். பிராமணன் நடுநிசியில் தட்டினால் திறக்காத கதவுகளே இந்தியாவில் இல்லை.முஸ்லீம் பெரியவர்கள் கூட பிராமணன் என்னைப்பரிவுடன் நடத்தினார்கள் தனியாக உணவு செய்து வழங்கினார்கள்.காவல்துறையினர் ரயில்வே டிடிஆர்கள்,ஸ்டேஷன் மாஸ்டர்கள் என்று என்னை மதிப்புடன் நடத்தாத ஒரு ஜீவனை நான் கண்டதில்லை என் பயணங்களில். என்னோடு பணிபுரிந்த இன்னபிற எஞ்சினியர்களின் அனுபவம் அப்படியாக இல்லை.என் முதலாளியே்அவர்களைக்காட்டிலும் என்னை சிறப்பாக நடத்தினார்.நான் பெங்களூரு சென்றபோதும் இதைத்தொடர்ந்து உணர முடிந்தது.
ஸோ நான் என்ன சொல்ல வர்றேன்னா.. சமூக ரீதியில் முன்தங்கியவர்கள் அனுபவிக்கும் சில சலுகைகள் பொருளாதார எடைத்தராசில் வராது,அது அவர்களை நிரந்தர அக்கவுண்டன்டுகளாக,சில நிறுவனங்களில் மேலாளர்களாகவும் பல ஆண்டுகள் வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத்தெரியாத,புள ளிவிவரங்களில் வராத அனுகூலங்கள்/நல்வாய்ப்புகளை நீதிமன்றங்கள் காண மறுக்கின்றனவோ என்பது என் ஐயம்.
நான் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததுமான சலுகைகளுக்கு நேர்மாறான,ஐயங்கள்,முன்முடிவுகளால் எதிர்கொள்ளும் அவமதிப்புகள்,நிராகரிப்புகள் நிறைந்த வாழ்க்கையை வாழும் ஒரு பெருங்கூட்டமும் இங்கு உள்ளது தானே? அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தாது,என்னைப்போன்றவர்க்கு ஒரு சிலபத்தாண்டுகளாக நேரும் சிறு உறுத்தலைக்களைய விரைந்து நீளும் நீதியின் கரங்கள்,உண்மையிலேயே நீதியின் கரங்கள் தானா?